வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2024 (11:39 IST)

புயல் பாதிப்பை காண வரும் மத்தியக் குழு! இந்த முறையாவது சரியாக நிதி ஒதுக்குவார்களா?

Fengal Cyclone

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைவில் வர உள்ளனர்.

 

 

வங்க கடலில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் கடந்த சனிக்கிழமை புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக கடலூர், நாகப்பட்டிணம், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் மக்கள் பலர் உடைமைகளை இழந்துள்ளனர்.

 

மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மக்கள் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் விரைவில் மத்திய அரசின் ஆய்வுக் குழு ஃபெஞ்சல் புயல் பாதிப்பை பார்வையிட தமிழ்நாட்டிற்கு வர உள்ளனர்.
 

 

3 குழுக்களாக வரும் அவர்கள் கடலூர், நாகை, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன்பின்னர் புயல் நிவாரண உதவிகளுக்காக குறிப்பிட்ட அளவு நிதியை மத்திய அரசு வழங்கும்.

 

முந்தைய புயல், மழை பாதிப்புகளின்போது தேவையான அளவு நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், இந்த முறை மத்திய அரசு எவ்வளவு ஒதுக்கீடு செய்வார்கள், நியாயமான நிதியுதவி அளிப்பார்களா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்நிலையில் பிரதமருடன் பேசியது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.


மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன். 


தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்

 
 

Edit by Prasanth.K