கண்டெய்னர் லாரி பணத்தில் மத்திய அரசும் உடந்தை - முத்தரசன் தாக்கு
கண்டெய்னர் லாரியில் பணம் பிடிபட்ட விவகாரம் மத்திய அரசின் உடந்தையில்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடத்தில் பேசிய முத்தரசன் "சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுகவின் சூழ்ச்சி மற்றும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதால் மக்கள் நலக் கூட்டணிக்கு தோல்வி ஏற்பட்டது.
தேர்தல் ஆணையத்தால் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. நடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தொடரும். தேமுதிக, தமாகா கட்சிகள் மக்கள்நலக் கூட்டணியில் தொடரவேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்.
கண்டெய்னர் லாரியில் பணம் பிடிபட்ட விவகாரம் மத்திய அரசின் உடந்தையில்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மத்திய அரசுக்கு அதிமுகவின் ஆதரவு தேவைப்படுகிறது.
அதிமுகவிற்கு மத்திய அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது. தலைநகரம் கொலை நகரமாக மாறிவிட்டது" என்று கூறியுள்ளார்.