காமராஜர் ஆட்சி அமைப்பது இப்போது சாத்தியமில்லை – காங்கிரஸ் தலைவர் பேச்சால் பரபரப்பு !
காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சஞ்சய் தத் காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை எனக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரி இடைத்தேர்தல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்த தொகுதியைப் பெறுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையில் இருந்த கருத்துவேறுபாடுகள் அதனால் முடிவுக்கு வந்தன. இந்நிலையில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றின் மூலம் மீண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் விரிசல் விழுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காந்தியடிகளின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் அறிவித்துள்ள பாதயாத்திரை நிகழ்ச்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது. அக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத், மற்றும் கே எஸ் அழகிரி கலந்துகொண்டார். அப்போது பேசிய சஞ்சய் தத் ‘உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும். அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். நாங்குநேரி தொகுதியை நமக்குக் கொடுத்ததற்காக திமுக வுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்.’ எனக் கூறினார்.
அப்போது கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் ‘காமராஜர் ஆட்சி என்னாச்சு ?’ எனக் கேட்டு கூச்சல் எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சஞ்சய் தத் ‘ சட்டமன்றத்தில் வெறும் 7 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு நாம் எப்படி காமராஜர் ஆட்சி அமைக்க முடியும். முதலில் இந்த ஏழு எம்.எல்.ஏ.க்களை நாம் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 70 எம்.எல்.ஏ.க்களாக மாற்றுவோம்’ எனப் பேசினார்.