1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (12:21 IST)

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்.!!

bomb threaten
சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்குகளை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளியில் இருந்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். 
 
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி இருக்கலாம் என சென்னை போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரின் ஐ.பி. முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இண்டர்போல் போலீசின் உதவியை நாட சென்னை போலீசார் முடிவெடுத்துள்ளனர். 
 
மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட்ட போலீசார் மூலம் பாதுகாப்பு வழங்கவும் சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டிருந்தது.

 
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக 13 பள்ளிகள் சார்பில் சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த புகார்களின் அடிப்படையில் தனித்தனியாக வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.