’’அதிகார போதையில் பாஜகவினர்''- டி.ஆர்.பி.ராஜா
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக நடக்கவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமாக, உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றன.
சமீபத்தில் வேட்புமனுதாக்கல் நடைபெற்ற நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே வாகன சோதனை நடத்த முயன்ற தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினரை திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டினார். இதுகுறித்த செய்திகள் மீடியாவில் வெளியானது.
இவ்விவகாரம் குறித்து திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல பொதுவாக மக்களையே மதிப்பதில்லை ! என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப் படுகிறது...ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதிக்கப்படுகிறது.
அதிகாரிகளின் பணி அதுவே என்று அதை மதித்து முழுமையாக ஒத்துழைப்பது நமது கடமை !அந்தக் கடமையிலிருந்து நான் தவறுவதில்லை. ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிகாரிகள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இப்படி எந்த அதிகாரியையும் மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல !
அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல பொதுவாக மக்களையே மதிப்பதில்லை ! இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும்? அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? சிந்தியுங்கள் ! என்று தெரிவித்துள்ளார்.