வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (10:02 IST)

புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகரான பாஜக சட்டமன்ற உறுப்பினர்

புதுச்சேரி சபாநாயகராக பாஜக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து முதல்வராக ரங்கசாமியும், தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனும் அடுத்தடுத்து பதவியேற்றனர். இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரை சபாநாயகராக தேர்வு செய்வது என கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக இழுபறி நீடித்தது.
 
இறுதியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவை சேர்ந்த மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வத்தை சபாநாயகர் பதவிக்கு முன்னிறுத்தினர். இதற்கிடையில் கடந்த வாரம் சபாநாயகர் தேர்தல் குறித்து சட்டபேரவை செயலர் அறிவித்தார். இதையடுத்து நேற்று முன் தினம் சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
 
இதில் பாஜக சார்பில் சபாநாயகர் மணவெளி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் முதல் சட்டமன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.
 
இந்த கூட்டத்தை சட்டப்பேரவையைத் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார். முதலாவதாக சபாநாயகர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் செல்வம் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
 
தொடர்ந்து சட்டமன்ற மரபுப்படி சபாநாயகர் செல்வத்தை முதல்வர் ரங்கசாமி, எதிர்கட்சித் தலைவர் சிவா (திமுக) ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். புதுச்சேரி வரலாற்றில் பாஜகவை சேர்ந்த ஒருவர் சட்டப்பேரவை சபாநாயகராக பொறுப்பேற்பது இதுவே முதன்முறை.