சென்னையில் இன்று அமைதிப்பேரணி: சாதிப்பாரா அழகிரி?
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் திமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என்று மு.க.அழகிரி விரும்பினாலும், அதற்கு மு.க.ஸ்டாலின் முட்டுக்கட்டையாக இருப்பதால் தனது பலத்தை நிரூபிக்க செப்டம்பர் 5ல் அமைதிப்பேரணி நடத்தப்படும் என அறிவித்தார். இந்த அமைதிப்பேரணியில் திமுகவின் உண்மையான விசுவாசிகள் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அழகிரி அறிவித்ததால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று அமைதிப்பேரணி நடைபெற நேற்றே ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கருணநிதியின் சமாதி, மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட 1000 கிலோ குண்டுமல்லி மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து சுமார் 1000 பேர் வருவதற்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அழகிரி சொன்னபடி 1 லட்சம் பேர் நிச்சயம் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
நேற்று அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்றி ரவி என்ற திமுக நிர்வாகியை திமுக தலைமை சஸ்பெண்ட் செய்துள்ளது. அதேபோல் இன்று கலந்து கொள்ளும் திமுக நிர்வாகிகளும், சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பல திமுக நிர்வாகிகள் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய அமைதிப்பேரணியை பிரமாண்டமாக நடத்தி தனது பலத்தை நிரூபித்து அழகிரி சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்