திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (14:55 IST)

சேலம் எட்டு வழி சாலை: நிலம் கையகப்படுத்துவதுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை - சேலம் இடையே 277 கி.மீ. தூரத்திற்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு 8 வழிச் சாலை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சாலைக்கான நிலங்கள், 2013ஆம் ஆண்டின் நில கையகப்படுத்தப்படும் சட்டத்தின் 105வது பிரிவின்படி செய்யப்பட்டு வருகின்றன.

 
2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டம், ஒருவரது நிலத்தை பொது நோக்கத்திற்காக கையகப்படுத்தும்போது கருத்துக் கேட்பு நடத்த வேண்டும், சமூக பாதிப்பைக் கணக்கிட வேண்டும், போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், மறுவாழ்வுத் திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கூறுகிறது. ஆனால், அந்தச் சட்டத்தின் 105வது பிரிவானது, 13 விஷயங்களைப் பட்டியலிட்டு, அவற்றுக்காக நிலங்களைக் கையகப்படுத்தினால் கருத்துக் கணிப்புக் கூட்டத்தையோ, சமூக பாதிப்பு கணக்கீட்டையோ செய்ய வேண்டியதில்லை என்று கூறுகிறது.
 
இந்த நிலையில், சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்காக வழக்குத் தொடர்ந்த பூவுலகின் நணபர்கள் அமைப்பு, 2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் அரசியல் சாஸனத்திற்கே முரணானது என்பதால் அந்தப் பிரிவின் கீழ் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரியிருந்தது.
 
அரசுத் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், நிலத்தை வழங்கும் விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும் என்றும் மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
 
இந்த சென்னை - சேலம் சாலை திட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் சிலவும் வழக்குகளைத் தொடர்ந்திருந்தன. இந்த நிலையில், 105வது பிரிவு குறித்து மட்டும் விசாரித்த நீதிமன்றம், அந்தச் சட்டப்பிரிவு அரசியல் சாஸனத்திற்கு முரணானது அல்ல என்றுகூறி வழக்கைத் தள்ளுபடிசெய்வதாக அறிவித்தனர்.
 
அதே நேரம், சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு தடை கோரும் வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.