புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2019 (13:38 IST)

தவணைக் கட்ட செயின் பறிப்பு – மாட்டிக்கொண்ட ஆட்டோ டிரைவர் !

ஆட்டோவுக்குத் தவணைக் கட்ட முடியாததால் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட டிரைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி அன்று மதுரவாயல் அருகே நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர் பறித்துச் சென்றார். இது சம்மந்தமான புகாரில் போலிஸார் அவரது வண்டியை சிசிடிவி கேமராக்களின் மூலம் ட்ரேஸ் செய்ய முயன்றபோது வண்டி நம்பரை மறைக்க அவர் அதில் சந்தனத்தை தெளித்திருந்தார்.

இதையடுத்து அவர் ஹெல்மெட்டில் இருந்த ஆர்.எஸ். என்ற எழுத்தை வைத்து போலிஸார் அவரது பைக் கடைசியாக வடபழனியில் சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலிஸார் விசாரணையை தீவிரப்படுத்த அது வடபழனியில் ஆட்டோ ஓட்டும் லட்டு என்கிற விஜயகுமார் என்பது தெரியவந்தது. இதன் பின்னர் அவரை பிடிக்க திட்டமிட்ட போலிஸார் அவரை வாடிக்கையாளர் போல போன் செய்து சவாரிக்கு அழைத்துள்ளனர்.

சவாரி என நினைத்து வந்த அவரைப் போலிஸார் கைது செய்து விசாரிக்க ஆட்டோ தவணைக் கட்டாததால் பைனான்சியர்கள் ஆட்டோவைத் தூக்கி சென்றதாகவும் அதை மீட்கவே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.