1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (11:26 IST)

மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளையை தட்டிக்கேட்டால் தாக்குவதா? அன்புமணி கண்டனம்..!

மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளையை தட்டிக்கேட்டால்  தாக்குவதா?  காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
செங்கல்பட்டு நகரம் வேதாச்சலம் நகரில் உள்ள மதுக்கடையில்  மதுப்புட்டிகளுக்கு அதிகபட்ச விலையை விட ரூ.10 அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக  குற்றஞ்சாட்டிய  ஒருவரை செங்கல்பட்டு நகர காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா என்பவர் கண்மூடித்தனமாக  தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்டதற்காக ஒருவரை காவல்துறையினர் தாக்குவது கண்டிக்கத்தக்கது. இது மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளைக்கு துணை போகும் செயல் ஆகும்.
 
தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும்; மதுவுக்கு அடிமையான அனைவரும் அப்பழக்கத்திலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.  அதே நேரத்தில் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதையும்,  அதை எதிர்த்து வினா எழுப்புபவர்கள் காவல்துறையினரால் தாக்கப்படுவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
 
மதுக்கடைகளை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்ட போது, மது குடிக்க வரும் குடிமகன்களுக்கு பாதுகாப்பு அளித்த காவல்துறை, இப்போது கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்டதற்காக  தாக்குவதை அனுமதிக்க முடியாது. அதற்கு காரணமான காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இத்தகைய செயல்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி மதுக்கடைகளை மூடுவது தான். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அடுத்த இரு ஆண்டுகளில் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 
Edited by Mahendran