வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (11:19 IST)

500 மதுக்கடைகளை மூடிவிட்டு புதிய கடைகளை திறப்பதா? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்து விட்டு, மறுபுறம் புதிய மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது; புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது என்பதை அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாநகரில் மக்கள் அதிகம் கூடும் வாலாஜாபாத் சாலையில் புதிய மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.  புதிய மதுக்கடைக்கு அப்பகுதி மக்களிடையே  எதிர்ப்பு எழுந்துள்ளது. புதிய மதுக்கடையை திறக்க வேண்டும் என்று எவரும் கோரிக்கை விடுக்காத நிலையில், காஞ்சிபுரத்தில் புதிய மதுக்கடையை அவசர, அவசரமாக திறக்க வேண்டிய தேவை என்ன?
 
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் இரு மாதங்கள் கழித்து, பா.ம.க. பலமுறை சுட்டிக்காட்டிய பிறகு தான் 500 மதுக்கடைகளும் கடந்த ஜூன் 22-ஆம் தேதி மூடப்பட்டன.  ஆனால், அதன்பின் இரு வாரங்கள் கூட ஆகாத நிலையில் புதிய மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனம் திறப்பது ஏன்?
 
தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வருவதைப் போன்று, படிப்படியாக முழு மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் அரசின் நோக்கம் என்றால், அந்தத் திசையில் தான் அரசு பயணிக்க வேண்டும். மூடப்பட்ட மதுக்கடைகள் தவிர மீதமுள்ள 4829 மதுக்கடைகளையும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு, புதிய மதுக்கடைகளை திறந்து அதற்கு நேர் எதிர்திசையில் பயணிப்பது ஏன்?
 
புதிய மதுக்கடைகளை திறப்பது, 90 மிலி அளவில் மதுவகைகளை அறிமுகம் செய்வது போன்ற நடவடிக்கைகள் அரசுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது. எனவே, தமிழ்நாட்டில் இனி, இடமாற்றம் என்ற பெயரில் கூட  புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படாது என்ற கொள்கை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, இப்போதுள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
 
 
Edited by Mahendran