வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (12:24 IST)

காடுவெட்டியில் பரபரப்பு – குரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குத் தடை ?

காடுவெட்டியில் உள்ள வன்னியர் சங்கத் தலைவரின் சமாதியில் அவருக்கு அஞ்சலி செலுத்த அவரது குடும்பத்தாரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படாததால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

நுரையீரல் திசுப்பை நோய்க் காரணாமாக  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, சிகிச்சைப் பலனளிக்காமல், கடந்த ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி காலமானார். குரு மறைந்த அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அவரது குடும்பத்திற்குள் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் குருவின் மகள் விருதாம்பிகை, தனது அத்தை மகன் மனோஜை கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்தில் கலந்துகொண்ட குருவின் மகன் கனலரசன் மற்றும் குருவின் சகோதரிகள், பாமக தலைமை மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். இதனால் பாமக வில் விரிசல் எழுந்துள்ளதாக அப்போதுக் கூறப்பட்டது. மேலும் குரு குடும்பத்தினர் பாமக வை விட்டு விலகி புதிய வன்னியர் சங்கத்தை உருவாக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதையடுத்து இன்று காடுவெட்டிக் குருவின் 58 ஆவது பிறந்த தினம் அனுசரிக்கப்பட இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த குருவின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை உடையார்பாளையம் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். பாமக கட்சி நிர்வாகிகளுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 1 காலை 9 மணி முதல் 10 மணி வரை அவரது குடும்பத்தினர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த இருக்கின்றனர்.

ஆனால் இந்தத் தடையை மீறி பாமக தொண்டர்கள் குரு நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த இருப்பதாகவும் அதனால் வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறி போலிசாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து காடுவெட்டியில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.