1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஜூலை 2024 (07:58 IST)

புத்த மதப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் புத்த மதப்படி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சொந்த வீடு இருக்கும் பெரம்பூருக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அவரது ஆதரவாளர்கள் பொதுமக்கள் ஆயிரக்கணக்கான அஞ்சலி செலுத்த வருகை தந்தனர் என்பதும் இதனால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடல் பெரம்பூர் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனை அடுத்து நேற்று மாலை ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக பெரம்பூரிலிருந்து பொத்தூருக்கு எடுத்து செய்யப்பட்டது. இரவு 10 மணி அளவில் அவரது உடல் லதா என்பவருக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் புத்த முறைப்படி இறுதி சடங்கு நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏழு புத்த பிட்சுகள் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்து வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva