ரஜினி கைவிரிப்பு எதிரொலி: அஜித்தை இழுக்க பாஜக முயற்சி?
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக உள்பட எந்த கட்சியும் இதுவரை முன்வராததால் அக்கட்சி தனித்துவிடப்பட்டதாக கருதப்படுகிறது. பாஜகவின் ஒரே நம்பிக்கையாக இருந்த ரஜினியும் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பதில் கைவிரித்துவிட்டதால் அக்கட்சி சிக்கலில் உள்ளது.
இந்த நிலையில் திருப்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜக கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'திரைத்துறையில் மிகவும் நேர்மையான நடிகர் அஜித். அவர் பலருக்கு நல்லதை செய்துள்ளார். அவரைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். இனி மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இறுதியில் அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என பேசினார்.
சமீபத்தில் வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் அஜித்தின் இமேஜை தாறுமாறாக உயர்த்தியதால் அந்த இமேஜை வரும் பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தி கொள்ள பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்தை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சியும் நடைபெறும் என தெரிகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி, ரஜினி மற்றும் விஜய்யை சந்தித்த நிலையில் இம்முறை அஜித்தை சந்தித்தாலும் ஆச்சரியம் இல்லை என்றே கூறப்படுகிறது