செல்லா காசான இரட்டை இலை? சுயேட்சையாகும் அதிமுகவினர்!
உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டியிடாமல் தேர்தலை புறக்கணித்துள்ளது என தகவல்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
அதிமுக புறக்கணிப்பு:
இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பப்படும் வேட்பாளர்களின் Form A மற்றும் Form B-ல் அதிமுக தலைமை கையெழுத்திடாத காரணத்தால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஸ்க்கு இடையே உள்ள பனிப்போரால் சின்னமும், கொடியும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டியிட உள்ளனர்.
இதில் பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டியிடாமல் தேர்தலை புறக்கணித்துள்ளது. ஆம் காஞ்சிபுரம், தஞ்சாவூர், தேனி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அதிமுகவினர் தேர்தலை புறக்கணித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.