உங்கிட்ட பதில் சொல்ல முடியாது! – பெண் காவலரிடம் அதிமுக பிரமுகர் வாக்குவாதம்!
கள்ளக்குறிச்சியில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வந்ததோடு பெண் காவலரிடம் தகறாரு செய்த அதிமுக பிரமுகரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக விவசாய செயலாளரான கதி தண்டபாணி சேலம் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்றுள்ளார்.
சுங்கசாவடி அருகே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அவரிடம் அனுமதி சீட்டு இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் மது அருந்தியிருப்பது தெரிய வந்ததால் ஊரடங்கு அமலில் உள்ளபோது உங்களுக்கு எங்கிருந்து மது கிடைத்தது? என பெண் காவலர் கேட்டதற்கு “உன்கிட்ட பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என அவரை திட்டிவிட்டு வேகமாக காரில் சென்றுவிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரின் இந்த செயலை பலரும் கண்டித்துள்ளனர்.