1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , வெள்ளி, 7 ஜூன் 2024 (15:47 IST)

உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த கென்யாவை சேர்ந்த பெண் உட்பட அவரது கூட்டாளிகள் கைது

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த கென்யாவை சேர்ந்த பெண் உட்பட அவரது கூட்டாளிகளை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த நபர் பெங்களூர் சிறையில் இருந்து கொண்டு போதை விற்பனைக்கு மூளையாக செயல்பட்டது போலீசாரின் விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது
 
கோவையில் போதைப் பொருட்கள் விற்பனை  தொடர்பாக போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு மெத்தடமைன் என்னும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கல்லூரிகள் நிறைந்த கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்து வரும் கும்பலை பிடிக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மெத்தடைமன் என்னும் உயரரக போதைப்பொருட்கள் விற்று வந்த கவுதம்,அபிமன்யு,பாசில், முகமது அர்சித், இஜாஸ்,பெவின் ஆகிய ஆறு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 102 கிராம் மெத்தடமைன் என்னும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைதானவர்களுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் குமார் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, தார்வார் பகுதிகளிலிருந்து போதை பொருளை கடத்தி வந்து விநியோகம் செய்தது தெரிய வந்தது. மேலும் கைதான பிரவீன்குமார், வினோத் ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணையில் இந்த போதை மருந்து கடத்தலுக்கு முக்கியமாக செயல்பட்டது கென்யா நாட்டைச் சேர்ந்த இவி பொனுகே என்ற பெண் என்பதும் தெரிய வந்தது.
 
இதனைத்தொடர்ந்து இவி பொனுகே- வை போலீசார் கண்காணித்து வந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அவரது கூட்டாளி உகாண்டா நோட்டை சேர்ந்த காவோன்கா என்பவரை சந்திக்க சென்ற போது கோவை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து கோவை அழைத்து வந்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
அதில் கைதான பெண் இவி பொனுகே, தார்வார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சட்டக் கல்வி படிப்பதற்காக தங்கி உள்ளார் என்பதும் சட்டக் கல்வி அவர் முடிக்கவில்லை என்பதும் அவரது விசா காலாவதியானதும் தெரிய வந்தது. மேலும் தார்வார், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்து கொண்டு ஆன்லைன் மூலம் போதை மருந்து விற்பனை செய்து வந்த இவி பொனுகே, உகாண்டா நாட்டைச் சேர்ந்த அவரது கூட்டாளி காவோன்கே சிறையில் இருந்து கொண்டே போன் மூலம் வரும் தகவலின் அடிப்படையில் அந்தந்த இடங்களுக்கு கென்யா பெண் போதை மருந்தை அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் நேரடியாக  போதை மருந்து கொடுக்காமல் ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு போதை மருந்து வைக்கப்பட்டு இருக்கும் இடத்தை லொகேஷன் மூலம் அனுப்பி எடுத்துக் கொள்ளச் சொல்வார் என்பதும் போதைப் பொருள் வாங்க வருபவர்கள் செல்போன் லொகேஷன் அடிப்படையில் சென்று அங்கு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் போதை மருந்தை எடுத்து செல்வதை வழக்கமாகக் கொண்டு இருப்பதாக கைதான பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
 
இதில் கிடைக்கும் பணத்தை கென்யா பெண், உகாண்டா நாட்டைச் சேர்ந்த மற்றொரு நண்பரான டேவிட் என்பவர் டெல்லியில் தொடங்கி இருந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்த நிலையில் அந்த வங்கி கணக்கில் உள்ள 49 லட்சம் ரூபாய் பணத்தை முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் வினோத் ,பிரவீன் குமார் மற்றும் கென்யாவைச் சேர்ந்த இவி பொனுகே ஆகிய மூவரையும் கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
மேலும் பெங்களூரு சிறையில் இருந்து கொண்டே போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வரும் காவோன்கோ என்பவரை கர்நாடக போலீஸ் மூலம் கைது செய்யவும் கோவை போலீசார் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்..