1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (14:33 IST)

மகன், மருமகளை சேர்த்து வைக்க முயற்சி! – கணவனை கொன்ற மனைவி!

நாமக்கலில் மகன், மருமகளை சேர்த்து வைக்க முயன்ற கணவனை மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கருமனூர் கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 60 வயதான விவசாயி சக்திவேல். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், விஜய கிருஷ்ணராஜ் என்ற மகனும் உள்ளனர்.

மகன் விஜயகிருஷ்ணராஜுக்கு முதலில் நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் விஜயகிருஷ்ணராஜுக்கு வெப்படை பகுதியை சேர்ந்த வினிதா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் தம்பதியர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயகிருஷ்ணராஜூவை பிரிந்து சென்ற வினிதா கருமனூரில் உள்ள வீட்டில் தங்கி இருந்துள்ளார். தனது மகனையும், மருமகளையும் சேர்த்து வைக்க வேண்டுமென முடிவு செய்த சக்திவேல் தனது மனைவியையும் அழைத்து சென்று மருமகளிடம் பேசியுள்ளார். ஆனால் அவர் வர மறுத்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்த சக்திவேல் மீண்டும் அவர்களை சேர்த்து வைப்பது குறித்து பேசியுள்ளார். ஆனால் வினிதா மீண்டும் தனது மகனுடன் சேர்வதில் கலைச்செல்விக்கு விருப்பம் இல்லாததாக தெரிகிறது. இதனால் இதுகுறித்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த கலைச்செல்வி இரும்பு ராடால் சக்திவேலை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கலைச்செல்வியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K