1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (10:40 IST)

சொத்து தகராறு; பெண்களை மண்ணை போட்டு மூடிய பங்காளிகள்! – ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திராவில் சொத்து தகராறில் இரண்டு பெண்களை உறவினர்களே மண்ணை போட்டு மூடி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹாரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோட்ரா நாராயணன். இவருக்கு தாளம்மா என்ற மனைவியும், சாவித்திரி என்ற ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் கோட்ரா நாராயணன் உயிரிழந்துள்ளார்.

அதற்கு பின் கோட்ரா நாராயணின் குடும்ப சொத்தை பிரிப்பதில் தகராறு எழுந்துள்ளது. கோட்ரா நாராயணனின் தம்பியின் மகன்கள் மூவரும் அந்த சொத்தை முழுவதுமாக எடுத்துக் கொள்ள முயற்சிப்பதாக கோட்ரா நாராயணின் மனைவி மற்றும் மகள் அந்த பகுதி எம்.எல்.ஏவிடம் தீர்வு கேட்டு முறையிட்டுள்ளனர்.


இந்நிலையில் சமீபத்தில் பூர்வீக நிலத்தில் வீடு கட்டுவதற்காக கோட்ராவின் தம்பி மகன்கள் மணலை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். இதை எதிர்த்து கோட்ராவின் மனைவி மற்றும் மகள் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கோட்ராவின் மனைவி, மகள் மீது ட்ராக்டரில் இருந்த மண்ணை போட்டு மூடியுள்ளனர்.

அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர். இதுதொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீஸார் அவர்களது உறவினர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பபம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K