ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 6 ஜூன் 2024 (17:37 IST)

2026 சட்டமன்ற தேர்தலே நமது இலக்கு.! பாமக தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம்..!!

Anbumani
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி என்ற இலக்கை நோக்கி வீறுநடை  போட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக பாமக தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி சாத்தியமாகவில்லை. வெற்றியை சுவைக்க முடியாதது எப்போதுமே வருத்தமளிக்கும் ஒன்று தான் என்றாலும், இதில் ஏமாற்றமோ, கவலையோ அடைவதற்கு எதுவுமில்லை. 
 
இந்தத் தேர்தல் போரில் நாம் வெற்றியை இழந்திருக்கலாம், ஆனால், களத்தை இழக்கவில்லை. களம் இன்னும் நமக்கு சாதகமாகவே இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளிலும் சளைக்காமல் களப்பணியாற்றிய உங்களுக்கு எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
உங்களின் உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உங்கள் உழைப்புக்கு இப்போது பயன் கிடைக்கவில்லை என்றாலும் இரு ஆண்டுகளில் நிச்சயம் பலன் கிடைக்கும். மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு, இது இப்படி இருந்திருந்தால், அது அப்படி நடந்திருக்கும் என்பன போன்ற யூகங்கள் தேவையில்லை. காரணம். இந்தத் தேர்தலுக்கு முன்பாகவே நமது இலக்கு மக்களவைத் தேர்தல் அல்ல, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் என்பதை தெளிவு படுத்தியிருந்தோம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான அணியை கட்டமைத்து போட்டியிடுவதும், வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதும் தான் நமது இலக்கு. அந்த இலக்கை நோக்கித் தான் நான் வீறுநடை போட வேண்டும். 2024 இல் மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒரு விஷயத்தை தெளிவாகக் காட்டுகின்றன. ஆளும் திமுக அதன் அதிகார வலிமை, பண வலிமை, படை வலிமை ஆகிய அனைத்தையும் பயன்படுத்தினாலும் கூட, அதன் வாக்கு வங்கி 2019 தேர்தலை விட கிட்டத்தட்ட 7 விழுக்காடு குறைந்திருக்கிறது.

ஆண்ட கட்சியான அதிமுக கடந்த தேர்தலை விட மூன்றில் ஒரு பங்கு இடங்களில் கூடுதலாக போட்டியிட்டு இருந்தாலும் கூட, அந்தக் கட்சியால் 2019 பெற்ற வாக்கு வங்கியை அதிகரிக்க முடியவில்லை. இன்னும் கேட்டால் 2021 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 13 விழுக்காடு குறைவாகவே பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் இல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்புவதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதை அனைவரும் உணர வேண்டும்; மக்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டும். அதைத் தான் பா.ம.க. செய்யப்போகிறது.
 
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு மிக நியாயமானது தான். தமிழ்நாட்டை 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்வதால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தமிழகத்தின் முதன்மைத் தொழில் வேளாண்மை தான் என்றாலும் கூட, அதன் வளர்ச்சிக்காக 57 ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக ஒரே ஒரு பாசனத் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வில்லை. பெண்கள் பாதுகாப்பாக வாழவோ, நடமாடவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
 
மாறாக, இராஜாஜி, உத்தமர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்டு, காமராசர், அண்ணா போன்றவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த மதுவிலக்கு அதிமுக, திமுக ஆட்சிக்காலங்களில் தான் சிதைக்கப்பட்டது. அதன் விளைவு பள்ளிக்குழந்தைகள் கூட மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்துத் தெருக்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றையும் கடந்து கொள்கை வகுப்பதன் மூலம் அரசின் வருவாயைப் பெருக்க வேண்டிய அரசு, அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறப்பதன் மூலம், அதிக அளவில் மதுவை விற்பதன் மூலமும் வருவாய் ஈட்டி, அதைக் கொண்டு அடிப்படைச் செலவுகளை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது. இது பேரவலமாகும். 
 
மதுவை விட பெரும் ஆபத்தாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் உருவெடுத்துள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத பகுதிகளில் கூட கஞ்சா தாராளமாகக் கிடைக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் ஆசிரியர்களைத் தாக்கு அவலம் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் ஆகியவை அதிகரிக்கவும் கஞ்சா போதையே காரணம்.
 
இன்னொருபுறம் ஆற்று மணல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்து ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்படுகின்றன. நிர்வாகச் சீர்கேடுகளின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் அரசு தோல்வியடைந்து வருகிறது. அரசு பள்ளிகளில் தரமானக் கல்வியையும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் கூட அதிமுக, திமுக அரசுகளால் வழங்க முடியவில்லை. திமுகவுக்கு ஆதரவாக குன்று போல நின்று ஆதரவளித்து வந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இப்போது வெறுப்பு மற்றும் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.
 
அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் உள்ளிட்ட ஏராளமான உரிமைகளை திமுக, அதிமுக அரசுகள் பறித்து விட்டன. அதற்கு பழிவாங்க அவர்களும் காத்திருக்கின்றனர். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆட்சிகளால் தமிழ்நாடு எதிர்கொண்ட அனைத்துச் சீரழிவுகளையும் சரி செய்வதற்கான அருமருந்து பாட்டாளி மக்கள் கட்சியிடம் தான் உள்ளது.
 
தமிழ்நாட்டை பாதிக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான முதல் குரல் பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து தான் ஒலிக்கும். மதுவிலக்கில் தொடங்கி நீர்மேலாண்மை, கல்வி, வேலைவாய்ப்பு உள்பட அண்மையில் மக்கள் விழிப்புணர்வு பெற்ற காலநிலை மாற்றம் வரை அனைத்து சிக்கல்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி என்ன சொல்கிறதோ, அதையே மற்ற அனைத்துக் கட்சிகளும் சொல்கின்றன. அந்த அளவுக்கு தமிழக நலனையும், மக்கள் நலனையும் காப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ளது.
 
இதையெல்லாம் உணர்ந்து தான் 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கு ஏற்ற வகையில் 2024 தேர்தலில் அதிமுகவும், திமுகவும் இல்லாத அணியை பாட்டாளி மக்கள் கட்சி கட்டமைத்தது. தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் திமுக, அதிமுக அல்லாத ஆட்சி என்பதாகவே உள்ளது. இத்தகைய சூழலில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயலாமல் இருப்பது கடமை தவறிய செயலாக அமைந்து விடும். அந்தத் தவறை பா.ம.க. செய்யாது.
 
தமிழ்நாட்டு அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சி பல சரிவுகளை சந்தித்தாலும், அவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. இப்போதும் அதேபோல் மீண்டு வருவோம். அதில் உங்களுக்கு எந்த ஐயமும், கவலையும் தேவையில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் நமக்கு சாதகமாக இருக்கிறது. மக்கள் நம்மை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள்.


நானும் முதல் ஆளாக இருந்து உங்களை வழிநடத்துவதற்கு காத்திருக்கிறேன். 2026 இல் தேர்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கி வீறுநடை போடுவோம் சொந்தங்களே’ என்று தனது கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.