1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (11:46 IST)

வாகனங்களுக்கான வரி உயர்வு! - தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரி, வாழ்நாள் வரி உயர்வு தொடர்பான மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


 
சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை தொடர்பான மசோதாவை அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது போக்குவரத்து துறையில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு வரிகள் உயர்த்தப்படவில்லை. எனவே,வரி விதிப்பு முறைகளில் திருத்தம்செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அனைத்து வகை வாகனங்களுக்கும் புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது

வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900,35 பேருக்கு மேல் பயணித்தால் ரூ.3 ஆயிரம், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வரி உயர்கிறது.

சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6 ஆயிரம் வரை பயணி எண்ணிக்கை அடிப்படையில் வரி உயர்த்தப்படுகிறது.

 கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், பணியாளர்களுக்கான பேருந்துகளுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45, பிற நிறுவனங்களின் பணியாளர் போக்குவரத்துக்கான வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என வரி விதிக்கப்படுகிறது.

புதிய இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி, ரூ.1 லட்சம் வரை 10 சதவீதம், 1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய இருசக்கர வாகனங்களுக்கு ஒரு ஆண்டு பழையது என்றால் ரூ.1 லட்சம் வரை விலைக்கு 8.25 சதவீதம், அதற்கு மேல் 10.25 சதவீதம், 2 ஆண்டு வரை பழையதாக இருந்தால் ரூ.1 லட்சத்துக்கு 8 சதவீதம், அதற்கு மேல் 10 சதவீதம் என வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2 முதல் 11 ஆண்டுகளுக்கு மேல்ஓடிக்கொண்டிருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு விலைக்கு ஏற்ப 6 முதல் 9.75 சதவீதம் வரை வாழ்நாள் வரி விதிக்கப்படுகிறது.

புதிய இருசக்கர வாகனங்களில் ரூ.5 லட்சம் வரை விலை இருந்தால் 12 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 18 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால் 20 சதவீதம் என வாழ்நாள் வரி விதிக்கப்படுகிறது.

இந்த 4 விதமான விலை அடிப்படையில், ஓராண்டு முதல் 11 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 முதல் 18.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 15 ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரிரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250,மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.