வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2019 (08:24 IST)

1500 ஆசிரியர்களுக்கு சம்பளம் எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மத்திய அரசின் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் என்று கூறப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது
 
இந்த நிலையில் இந்த காலக்கெடுவிற்கு பின்னரும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்த 1500 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தேர்வில் வெற்றி பெற ஐந்து ஆண்டுகள் பள்ளிக்கல்வித்துறை அவகாசம் அளித்தும், இந்த ஐந்து ஆண்டுகளில் 1500 பேர் தேர்ச்சி பெறாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
 
இந்த நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கும் ஏப்ரல் மாத சம்பளம் நிறுத்தப்படாது என்றும், வரும் ஜூன் மாதம் நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.