80 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் இலவசம்
தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் நிலையில் சுமார் 80 லட்சம் பேர் மின்சாரக் கட்டணம் செலுத்த தேவை இருக்காது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தான் பதவியேற்ற முதல் நாளிலே கையெழுத்திட்ட திட்டங்களில் ஒன்றான 100 யூனிட் வரை மின் கட்டணம் இலவசம் மூலம் சுமார் 80 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
எவ்வித வரைமுறைகளும் இன்றி அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ. 1,607 கோடி மானியம் வழங்குவதால், மின்சார வாரியத்துக்கு எந்த விதத்திலும் இழப்பும் ஏற்படாது.
தமிழகத்தில் 100 யூனிட் வரை சுமார் 80 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இனி, இந்த 80 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. 200 யூனிட் வரை 57 லட்சம் பேரும், 500 யூனிட் வரை 48 லட்சம் பேரும், 500 யூனிட்டுக்கு மேல் சுமார் 9 லட்சம் பேரும் மின் நுகர்வோர்கள், என்றனர்.