இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி டெல்லி நோக்கி மாணவர்கள் பயணம்!
Publish: Wed, 12 Nov 2008 (23:49 IST)
Updated: Wed, 12 Nov 2008 (23:48 IST)
இலங்கைத் தமிழர்கள் மீதான போரை உடனடியாகச் சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் இருந்து தலைநகர் புது டெல்லிக்கு மாணவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசை வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தலைநகர் புது டெல்லியில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் பேரணி நடக்கவுள்ளது.இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி.மகேந்திரன் தலைமையில் மாணவர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் பாரதி, பொதுச் செயலர் திருமலை ஆகியோருடன் புதன்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புது டெல்லிக்குப் புறப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு, ஏ.என்.கோபு, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, ம.தி.மு.க. பொதுச் செயல் வைகோ, அ.இ.அ.தி.மு.க. மாணவர் அணிச் செயலர் உதயகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், நடிகர் சத்தியராஜ் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.