வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்திரி வழிபாடு செய்யப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா...?

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். 

அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர்.
 
ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள்.
 
பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. 
 
அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள். அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.