வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முதுகுவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களும் தீர்வுகளும் !!

எடை கூடிய பொருட்களைத் தூக்குதல் முதுகுவலி உருவாக்கும் முக்கிய காரணி. இது அலுவலகங்களில் பாரமான பெட்டிகளைத் தூக்குவோருக்கு மட்டுமல்லாமல் தொடர்ந்து கனமான லாப்டாப் பை, கேமரா பை, மளிகை, கைப்பெட்டி போன்றவற்றைத் தூக்கிச்செல்வோருக்கும் பொருந்தும். 

ஒரே இடத்தில் நீண்ட நேரமாக உட்கார்ந்திருப்பதோ, நிற்பதோ, படுத்திருப்பதோ முதுகிற்கு ஆரோக்கியமானதல்ல. ஆகவே, நேரம் கிடைகும்போதெல்லாம் எழுந்து அக்கம் பக்கம் நடந்து சில எளிய நீட்சி பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் முதுகுப்புறத்தில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கவும் செயல்பாட்டின்மையால்  வரும் நோவு, அழுத்தம் போன்றவை குறையவும் வழி வகுக்கும்.
 
முடிந்தவரை தோள்களிலுள்ள பாரத்தை குறைக்கவோ, உடலின் இருபுறமும் பாரத்தைப் பிரியுமாறு செய்யவோ அல்லது ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு மாற்றி மாற்றிக்கொண்டோ இருப்பது நல்லது.
 
முதுகுவலி குறைய காலுக்கு இதமான, 1- இஞ்சுக்கும் குறைந்த ஹீல்ஸ் செருப்புக்களை அணியுங்கள். 
 
முதுகு படுக்கையை தொடுமாறு நேராக தூங்குவதால் முதுகுத்தண்டின்மேல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கால்களை லேசாக உயர்த்திக்கொண்டு தூங்கும் போது  இந்த அழுத்தம் குறைகிறது. முழங்காலின் அடியில் தலையணையை வைத்துத் தூங்கும்பொழுது, முதுகின்மீதான அழுத்தம் பாதியாகக் குறைக்கப்படுகிறது.
 
கால்சியம், விட்டமின் D அடங்கிய உணவுகளை உட்கொள்வதால் எலும்புகளை வலுவாக வைத்திருக்கலாம். கால்சியம் பால், தயிர், கீரைகளில் கிடைக்கிறது. விட்டமின் D கொழுப்புள்ள மீன், முட்டையின் மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, போன்றவற்றில் கிடைக்கிறது.
 
நிமிர்ந்த நிலை மிடுக்கான நல்ல தோரணையைத் தருவதுடன், முதுகுத்தண்டின் உட்பாகங்களைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வளைந்து  நிற்கும் மோசமான நிலையினால் முதுகிற்கும் முதுகுத்தண்டிற்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.