வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வெல்லத்தில் போலியானதை எவ்வாறு கண்டுபிடிப்பது...?

வெல்லம் தயாரிப்பதில் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் வெல்லங்களில் மக்களை தீராத நோயில் தள்ளக்கூடிய எவ்வித ரசாயனமும் சேர்க்கப்படுவது இல்லை. 

கடைகளில் வெல்லம் வாங்கும் போது அதில் ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுப் பாருங்கள். வெல்லம் இனிப்புச்  சுவையுடன் இருந்தால் அது சுத்தமான வெல்லம். ஆனால் சற்றே உப்புத்தன்மையுடன் இருந்தால் அதில் அதிகளவிலான மினரல் உப்புக்கள்  சேர்க்கப்பட்டுள்ளன என்று அறிந்து கொள்ள வேண்டும். 
 
அதுமட்டுமல்ல வெல்லத்தில் உப்புத் தன்மை இருந்தால் அது ஃப்ரெஷ் ஆகத் தயாரிக்கப்பட்ட வெல்லம் இல்லை நாட்பட்ட வெல்லம் என்பதையும் கண்டறிந்து கொள்ளலாம். ஏனெனில் நாட்பட்ட வெல்லத்தில் உப்புச்சுவை அதிகமிருக்கும்.
 
வெல்லத்தை வாயில் இடுகையில் ஊன்றிக் கவனித்தால் மட்டுமே உணரும் அளவுக்கு வாய் கசக்கிறது எனில் அந்த வெல்லம்  தயாரிக்கப்படும் போது உச்சபட்ச கொதிநிலையில் கேரமலைஸேஷனுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
வெல்லத்தை வாயிலிடுகையில் கரையாத உப்புக்கள் ஏதேனும் தென்படுகின்றவனா என்றும் ஆராய வேண்டும். அப்படி உப்பு போன்ற பொருட்கள் நாக்கில் நெருடினால் அதிக இனிப்புத் தன்மையை உருவாக்கும் பொருட்டு செயற்கையாக இனிப்புச் சுவையூட்டும் உப்புகள் அதில்  கலக்கப்பட்டுள்ளன.
 
வெல்லம் வாங்கும் போது அதன் நிறத்தையும் கவனிக்க வேண்டும். அடர் பிரெளன் நிற வெல்லமே தூய்மையான வெல்லத்திற்கு அறிகுறி. அப்படியல்லாது மஞ்சள் நிறத்தில் வெல்லம் இருந்தால் அதை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
 
நீங்கள் வாங்கும் வெல்லத்தில் சுண்ணாம்புத் தூள் கலப்படம் உண்டா? இல்லையா? என்பதை அறிய வெல்லத்தில் ஒரு சிறு துண்டை எடுத்து நீர் நிறைந்த கோப்பையில் இடுங்கள். வெல்லம் கரைந்ததும் பார்த்தால் சுண்ணாம்புத் தூள் கோப்பையின் அடியில் படிந்திருக்கும்.