புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆரோக்கியமான கருமை நிற கூந்தலை பெற உதவும் அழகு குறிப்புக்கள்...!!

எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது. ஆனால் இந்த சாற்றினைக்  கொண்டு, கூந்தலுக்கு தடவி ஊறவைத்து குளித்தால், முடியானது கருமையாக இருக்கும்.
 

கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காயவைத்து, சூடான  எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால், கருமையான முடியைப் பெறலாம்.
 
முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெய்யையோ அல்லது சூடான எண்ணெய்யில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊறவைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.
 
நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய்  எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும்.
 
அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய்யை முடிக்கு பயன்படுத்தினால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும்.
 
முடிக்கு கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால், முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன்  வளரும்.