செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர சில குறிப்புகள் !!

கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க  வேண்டும்.


அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து,  கருமையான முடியை நிலைக்க வைக்கலாம்.
 
கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி,  தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும்.
 
கறிவேப்பிலையை வெயிலில் காயவைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால், கருமையான  முடியைப் பெறலாம்.
 
முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெய்யையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.
 
வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால் முடியில் ஏற்படும்  நிற மாற்றத்தைத் தடுக்கலாம்.
 
நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய்  எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும்.