வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (16:48 IST)

ரஃபேல் ஊழல் வெறும் தொடக்கமே - பாஜக காங்கிரஸ் பரஸ்பர தாக்குதல்

ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பிரதமர் மோடி ஊழலில் ஈடுபட்டுள்ளார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டிவரும் நிலையில் பாஜக தலைவர்கள் ராகுலுக்கு பதிலடி.


ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸின் முன்னாள் அதிபர் இந்திய அரசு தங்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே பரிந்துரை செய்ததாகக் கூறியதையடுத்து கடந்த சில நாட்களாக ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஆரம்பம் முதலே ராகுல் காந்தி மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது தொகுதியில் கட்சி உறுப்பினர்களோடு உரையாடிய அவர் ‘ஊழலில்லா ஆட்சியை அமைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க தற்போது 30000 கோடி ரூபாயை அம்பானிக்குக் கொடுத்துள்ளது. அது மொத்தமும் இந்திய மக்களின் வரிப்பணமாகும்.

அவர்களின் ஊழல் வேடிக்கைகள் இப்போதுதான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கின்றன. போகப்போக இன்னும் விஜய் மல்லையா, லலித் மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எனப் பல விஷயங்களில் அவர்களின் சுயரூபம் விரைவில் வெளிப்படுத்துவோம். மோடி ஒன்றும் பாதுகாவலர் கிடையாது. அவர் ஒரு கொள்ளையர்.’ என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலடி தரும் விதமாக பா.ஜ.க. மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் ‘ராகுலைப் போல பொறுப்பற்றவர் ஒருவர் காங்கிரஸின் தலைவராக இருப்பது அக்கட்சிக்கே அவமானம். அவரது குடும்பமே ஊழலில் மூழ்கியது. விரைவில் காங்கிரஸின் சுயரூபத்தை வெளிக்கொண்டு வருவோம்’ எனக் கூறியுள்ளார்.