செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (20:51 IST)

டெல்லியில் இன்று மிகப்பெரிய அளவில் பேரணி? காரணம் என்ன?

வேளாண் பொருட்களுக்கு அதிகப்படுத்தப்பட்ட விலை, கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச கூலி ஆகியவற்றை வலியுறுத்தி, இடது சாரி அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் டெல்லியில் இன்று மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தினார்கள்.
 
டெல்லியில் இன்று காலை முதல் மழை பெய்தபோதிலும்கூட, ராம்லீலா மைதானத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, பல்வேறு சாலைகள் வழியாக நாடாளுமன்ற சாலையில் சென்றது.   
 
மஸ்தூர் கிஷான் ஒருங்கிணைப்பு பேரணி என்ற பெயரில் தொடங்கிய இந்தப் பேரணியை சிஐடியு, அனைத்து இந்திய விவசாயிகள் சங்கம், அனைத்து இந்திய வேளாண் தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றில் இருந்து பங்கேற்றனர்.
 
பேரணியில் பங்கேற்ற தொழிலாளர்கள், விவசாயிகள் சிவப்பு கொடிகளை ஏந்திக்கொண்டும், பாஜகவின் கொள்கைக்கு எதிராக முழக்கமிட்டு, மத்திய அரசின் வகுப்புவாத, பிரித்தாளும் கொள்கையை எதிர்த்து தொழிலாளர்கள் முழக்கமிட்டுச் சென்றனர். டெல்லியில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியால், லிட்யியன் சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. நாடாளுமன்ற சாலை, ஜன்பத், கே.ஜி.மார்க் ஆகியவை போக்குவரத்து நெரிசல் காரணமாக மூடப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. 
இந்த பேரணியில் பங்கேற்ற அனைத்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹனன் முல்லா கூறுகையில், “மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து விவசாயிகளுக்காக எதையும் செய்யவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பாஜக அரசு எங்களை முட்டாளிக்கிவிட்டது. சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தி, விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலைகொடுக்கக் கேட்டு வருகிறோம். விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச கூலியாக ரூ.18 ஆயிரம் கொடுங்கள் என்று கேட்கிறோம். இந்த நேரத்தில் எங்களின் போராட்டத்தையும் கோரிக்கையையும் வலியுறுத்துவோம்” எனத் தெரிவித்தார். 
 
சிஐடியு அமைப்பின் பொதுச்செயலாளர் தபான் சென் கூறுகையில், “விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து வந்தது சமூகத்தில் உள்ள மற்ற மக்களை உத்வேகப்படுத்துகிறது. நவம்பர் 3-ம் தேதி இளைஞர் கூட்டமைப்பு சார்பில் வேலையின்மைக்கு எதிராகப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 24 மணிநேர தர்ணா போராட்டம் மத்தியஅரசு அலுவலகங்கள் முன் நடத்தப்படும். நவம்பர் 30-ம் தேதி டெல்லியை நோக்கி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.