1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2019 (07:51 IST)

சிவசேனாவுக்குத்தான் முதல்வர் பதவி: 150 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தயார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என கருதப்பட்ட நிலையில் தற்போது யாருக்கு முதல்வர் பதவி? என்பதில் வந்த பிரச்சனை தற்போது கூட்டணியே முறிந்துவிடும் அளவுக்கு வந்துள்ளது
 
இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க சிவசேனாவுக்கு ஆதரவளிக்க தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் சிவசேனா தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையும் என்றும் கூறப்படுகிறது
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா 56 தொகுதிகளிலும் தேசியவாத காங். 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றறுள்ளதால் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங். இணைந்தால் 150 உறுப்பினர்கள் உள்ளது. ஆட்சி அமைக்க 145 உறுப்பினர்கள் போதும் என்பதால் இந்த கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றே தெரிகிறது
 
மஹாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசு அமையவில்லை என்றால் குடியரசு தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு இருப்பதால் சிவசேனா தலைமையிலான ஆட்சி குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என தெரிகிறது
 
ஆனால் அதிக தொகுதிகளை வென்றுள்ள பாஜக தான் முதலில் ஆட்சி அமைக்க அழைக்கப்படும் என்றும், பாஜக மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத பட்சத்தில் சிவசேனா தனது ஆட்டத்தை தொடங்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.