பிரதமர் மோடி சந்திப்பில் நடந்தது என்ன? மம்தா பானர்ஜி விளக்கம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடியும் கடந்த சில ஆண்டுகளாக எதிரும் புதிருமாக அரசியல் நடத்தி வந்தனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையான தாக்கி பிரச்சாரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற விழாவுக்கு கூட செல்லாத மம்தா, மோடியை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு தேவையான நிதியுதவியை பெறவும் ஒரு சில திட்டங்களை அமல்படுத்தும் நோக்கத்திற்காகவும், இன்று பிரதமர் மோடியை, முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி இந்த சந்திப்பு இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடந்தது
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, பிரதமருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாகவும், மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட உள்ள உலகிலேயே இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கத்தை திறந்துவைக்க மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்ளா என மாற்றுவது தொடர்பாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்
முன்னதாக பிரதமரை சந்திக்க டெல்லி செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கு மோடியின் மனைவியை தற்செயலாக சந்தித்த மம்தா பானர்ஜி அவருக்கு புடவை ஒன்றை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது