காத்து வாக்குல ரெண்டு கல்யாணம்..! டிக்டாக் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
டிக்டாக் வீடியோ செய்யும் நபர் ஒருவர் மீது இரண்டு பெண்கள் காதல் கொண்ட நிலையில் இருவரையுமே அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்த 25 வயது வாலிபர் டிக்டாக் வீடியோக்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அவரது டிக்டாக் வீடியோக்களை கண்டு விசாகப்பட்டிணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடன் செல்போன் மூலமாக பழகியுள்ளார். பின்னர் இது காதலாக மலர்ந்துள்ளது.
அதேபோல கடப்பாவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணும் இளைஞர் மேல் காதல் கொள்ள மற்றொரு பெண்ணுக்கு தெரியாமல் இந்த பெண்ணையும் காதலித்து வந்துள்ளார் அந்த இளைஞர். இந்நிலையில் கடப்பாவை சேர்ந்த இளம்பெண்ணுடன் சமீபத்தில் அந்த இளைஞருக்கு திருமணம் நடந்துள்ளது.
அதற்கு பின்னர் விசாகப்பட்டிணத்தை சேர்ந்த இளம்பெண், அந்த இளைஞர் சில நாட்களாக பேசாததால் அவரை தேடி அவரது வீட்டிற்கே சென்றுள்ளார். அங்கு அவருக்கு திருமணமாகியிருந்ததை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆனால் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டதால் இனி திரும்பி செல்ல முடியாது எனவும், தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுமாறும் அந்த பெண் கேட்டுள்ளார். இதற்கு இளைஞரின் முதல் மனைவியும் சம்மதிக்கவே அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். டிக்டாக் மூலமாக இளைஞர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.