செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (22:24 IST)

லெஸ்பியன் திருமணம்: "யாரிடம் நிறைவாக இருக்கிறதோ அவர்களுடன் வாழ்வதே மகிழ்ச்சியான வாழ்வு"

"இருக்கும் ஒரு வாழ்க்கையை உங்களை சுற்றி இருப்பவர்களின் எண்ணங்களால் கட்டமைத்து கொண்டே போனால் உங்களுக்கான நிறைவாக வாழ்க்கையை என்றுமே வாழ முடியாது. அடுத்தவருக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் யாரிடத்தில் நிறைவாக உணர்கிறீர்களோ அவர்களுடன் இணைந்து நிலையாக வாழ்வதே மகிழ்ச்சியான வாழ்வு."
 
இப்படி மனம் திறந்தவர் சுபிக்ஷா சுப்ரமணி. வங்கதேசத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட தமிழ்நாட்டுப் பெண் அவர்.
 
 
இவர்கள் இருவரும் சமீபத்தில் சென்னையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
 
 
தங்களுடைய காதல் வாழ்வு, திருமண வாழ்க்கை, தன்பாலின உணர்வு குறித்த சமூகத்தின் பார்வை என இருவரும் பல்வேறு விஷயங்களை பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்டது இந்த ஜோடி.
 
 
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் சுபிக்ஷா சுப்ரமணி. தமிழகத்தில் பிறந்து கத்தாரில் வளர்ந்து இப்போது கனடாவில் மூத்த நிதி ஆலோசகராக பணியாற்றி வருகிறார். முறைப்படி பரதநாட்டியம் கற்று அரங்கேற்ற நிகழ்வும் நடத்தியிருக்கிறார் சுபிக்ஷா.
 
 
" 19 வயதில் என்னை முதன்முதலாக Bisexual ஆக உணர்ந்தேன். ( Bi Sexual என்பது ஆண், பெண் இருபாலரிடத்திலும் ஈர்ப்பு ஏற்படும் உணர்வு) . ஆனால் அந்த வயதில் ஏன் இப்படி எனக்கு தோன்றுகிறது என்று புரியவில்லை. முதலில் என்னுடைய பெற்றோர்களிடத்தில் இதை பற்றி சொன்னபோது என் உணர்வுகளை அவர்கள் காது கொடுத்து கேட்டார்கள். டீன் ஏஜ் பருவத்தில் இருப்பதால் இப்படி தோன்றுவது சாதாரணம். நாளடைவில் அனைத்தும் சரியாகி விடும் என்று சொன்னார்கள்.

 
ஆனால் எனக்கு இது சரியாகவில்லை. என் உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் நான்தானே பொறுப்பாக முடியும். அதனால் ஏன் எனக்கு உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று படிக்க தொடங்கினேன் என்று புன்னகைத்தார் சுபிக்ஷா.
 
 
பல்வேறு ஆய்வுகளைப் பற்றி ஆழ்ந்து படித்துவிட்டு தான் ஒரு Bisexual என்று புரிந்துகொண்டார் அவர். ஆனால் ஹார்மோன் ரீதியிலான இந்த மாற்றங்கள் அவருடைய படிப்பிலும், வேலையிலும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. வெற்றிகரமாக பட்டப்படிப்பை முடித்து பிறகு, CA படிப்பு முடித்து ஒரு சர்வதேச நிறுவனத்தில் வேலையும் கிடைத்திருக்கிறது இவருக்கு.
 
பின்னர் திருமணம் என்று செய்து கொள்ள வேண்டும் என்ற நினைத்த போது, பெண்கள் மீதுதான் கூடுதலாக ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. நம் ஊரில் திருமணங்களுக்கு எப்படி சமூக ரீதியிலான செயலிகள் ( Applications ) இருக்கிறதோ அதே போன்று கனடாவில் LGBT சமூகத்தினருக்கு என்று தனியாக ஒரு செயலி இருக்கிறது. அதில்தான் முதன்முதலாக டினாதாஸ் என்ற பெண்ணை சந்திந்து இருக்கிறார் சுபிக்ஷா சுப்ரமணி.
 
 
"நான் திருமண விஷயத்தில் ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தேன். எனக்கென்று சில எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் என் உணர்வுகளுக்கு என் வாழ்க்கைக்கு அவர்கள் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எண்ணம், சிந்தனை, தெளிவு என நான் விரும்பியவாறு இருந்த டினாவை முதன்முதலாக பார்த்தும் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
 
முதலில் செயலி மூலம் பேசத் தொடங்கினோம். பின்னர் சிறிது நாள் கழித்து நேரில் பார்க்க முடிவு செய்தோம். அதன் பிறகு காபி ஷாப்பில் சந்தித்து கொண்டோம். நிறைய பேசினோம்.. எங்களுடைய கடந்த காலங்கள். தன்பாலுணர்வு குறித்து நாங்கள் அறிந்த விஷயங்கள். எங்கள் குடும்பம்... என நாங்கள் பேசியவை அனைத்தும் இரு மனதின் எண்ணங்களை பிரதிபலித்தன. டினா பேசப் பேச என் மனதிற்குள் உற்சாகம் சிறகடித்துப் பறந்தது. கண்களில் கனிவுடன், பேச்சில் தெளிவுடன் டினா பேசிய ஒவ்வொரு சொல்லில் இருந்த ஜீவனும் அவர் மீது எனக்கிருந்த காதலை எனுக்குள் சொல்லியது.
 
இந்த சந்திப்பிற்குதான் இத்தனை காலம் காத்திருந்தேனா என என் மனது எனக்குள்ளேயே கேள்விகளை கேட்க தொடங்கியது. உங்களுக்கு ஒன்று தெரியுமா ? நமக்கென்று வாழ்க்கையில் விதிக்கப்பட்ட நபர் எது தடுத்தாலும் நம்மிடம் வந்து சேர்வார். இது பிரபஞ்சத்தின் அடிப்படை. டினா-வும் அப்படித்தான். எனக்குரியவராக அவர் என்னிடத்தில் வந்து சேர்ந்ததாக நினைத்தேன். அன்று நடந்த சந்திப்பு எங்கள் வாழ்வின் தொடக்க அத்தியாயமாய் இருந்தது.
 
முக்கியமாக எந்த கடின சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு தன்னை காலத்திற்கு ஏற்றவாறு செதுக்கிக் கொண்ட டினாவின் வாழ்க்கை கதை எனக்குள் அவர் மீதான காதலை அதிகரிக்கச் செய்தது. 6 வருடங்கள் ஒன்றாக பழகினோம். இனி வாழ்க்கை முழுமைக்கும் இணைந்து பயணிக்கவும், பொறுப்புகளை ஏற்கவும் மனதளவில் நாங்கள் தயார் என்று நினைத்த தருணத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம் என தங்களின் காதல் பக்கங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் சுபிக்ஷா.
 
லெஸ்பியன் திருமணம்
பட மூலாதாரம்,PICTUREMAKERS, INDIA
 
சுபிக்ஷா தன்னுடைய மனைவியாக தேர்ந்தெடுத்திருக்கும் டீனா தாஸ் வங்கதேசத்தை சேர்ந்தவர். 16 வயதில் தனக்கு ஆண்களைவிட பெண்கள் மேல் ஏன் அதிக ஈர்ப்பு ஏற்படுகிறது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குடும்பத்தினரிடம் சொல்ல, இவருக்கு ஏதோ நோய் ஏற்பட்டிருக்கிறது என்று கருதி டினாவிற்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகே தான் ஒரு லெஸ்பியன் என்பதை உணர்ந்திருக்கிறார் டீனா. ( லெஸ்பியன் என்பது பெண்களுக்கு பெண்கள் மேல் வரும் காதல் ஈர்ப்பு ) திருமண வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாய் இல்லை.
 
 
ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்று நினைத்து 2 முறை IVF சிகிச்சைக்கு கூட சென்றிருக்கிறார் டீனா. ஆனால் கணவர் என்றைக்கும் அவரை புரிந்து கொள்ளவே இல்லை. 4 வருடங்களில் சச்சரவு ஏற்பட்டு திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி 2 பேரும் சேர்ந்து வாங்கிய சொத்தை பிடுங்கிக் கொண்டு விவாகரத்து வழங்கி டினாவை தனியாக வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கிறார்கள்.
 
 
" உண்மையில் எனக்கு ஏன் இப்படி வாழ்க்கையில் நடக்கிறது என்ற நினைத்து அழுது கொண்டே இருந்தேன். என் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மற்றவர்கள் ஏன் என்னை வெறுக்கிறார்கள் என்ற கேள்வி என்னை குடைந்து கொண்டே இருந்தது. ஆணின் மீது ஈர்ப்பு இல்லாத நிலையில் அவரையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்றிக் கொண்டு குடும்பத்தினரையும் சங்கடத்தில் ஆழ்த்தி வாழ்வதில் எனக்கு விருப்பம் இல்லை. சிறுவயதில் இருந்தே குடும்பம்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட குடும்பத்தினரே புரிந்து கொள்ளாமல் என்னை வீட்டை விட்டு துரத்தியது கஷ்டமாக இருந்தது. உண்மையான அன்பிற்காக நான் வருடக்கணக்கில் ஏங்கியிருக்கிறேன். எனக்கென்று குடும்பம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தினமும் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். என் சிந்தனை அனைத்தையும் என் வேலையின் மீது திருப்பினேன்.
 
தினமும் 2 இடங்களில் வேலை. 14 மணி நேர உழைப்பு என தொடர்ந்து எனக்காக, என் தேவைகளுக்காக உழைத்தேன். என் விவாகரத்து வழக்கு செலவுகளுக்குகூட நானே வேலை பார்த்து சம்பாதித்தேன். கடும் உழைப்பின் பலனாக கனடாவில் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறேன். இப்போது கனடாவில் ஒரு மருத்துவமனையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன். நான் அன்பு செலுத்த , தினமும் என் வருகைக்காக காத்திருக்கும் குடும்பம் ஒன்று கிடைக்காதா என்று ஏங்கிய நேரத்தில்தான் சுபிக்ஷாவை சந்தித்தேன். அவர் மீது அவரின் குடும்பத்தினர் செலுத்தும் அன்பு, என் மீது சுபிக்ஷா வைத்திருக்கும் காதல் அதன் நீட்சியாக எங்கள் திருமணம்... என இப்போது தான் சந்தோஷ காற்றை சுவாசிக்க தொடங்கி இருக்கிறேன்" என கண்களில் கண்ணீரோடு தன் அனுபவங்களை பகிர்ந்தார் டீனா தாஸ்.
 
 
ஆனால் இந்த திருமணம் அத்தனை எளிதில் முடிவாகவில்லை. சுபிக்ஷா பெற்றோரிடத்தில் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொன்னதும், அவரையே திருமணம் செய்து கொள்வதாக சொன்னதும் பெற்றோர் முதலில் அனுமதி மறுத்தனர். ஆனால் தங்கள் பெண்ணுக்கு ஏன் இந்த எண்ணம் ஏற்பட்டது என்றும் தெரிந்து கொள்ள நினைத்து LGBT சமூகத்தினர் குறித்தும், அவர்களின் சிந்தனைகள், உணர்வுகள் என பல விஷயங்களை படிக்க தொடங்கி இருக்கிறார்கள். பின்னர் இதற்காகவே 2 மாதங்கள் கவுன்சிலிங்கிற்கும் சென்றுள்ளார்கள். அதற்கு பிறகு தன் பெண்ணின் விருப்பத்திற்கு மதிப்பளித்து இந்த திருமணத்தை தங்கள் பாரம்பரிய முறைப்படி மகிழ்ச்சியாக நடத்தி முடித்திருக்கிறார்கள். மிக முக்கியமாக சுபிக்ஷாவின் 85 வயது பாட்டி தன்னுடைய பேத்தி ஏன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் என நினைத்து, அவர்களுடனே ஒரு வாரம் தங்கி இருவரிடமும் பேசி இருக்கிறார். இருவரும் தங்கள் முடிவுகளில் உறுதியாக நின்றதால் பாட்டியும் LGBT சமூகத்தினர் பற்றி படித்து தகவல்களை அறிந்து திருமணத்தை சந்தோஷமாக நடத்தி உள்ளார்.
 
 
"எங்கள் பெண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று சொன்னதும் முதலில் நாங்கள் பயந்தோம். இது வேண்டாம் என்றும், உறவினர்கள், சமூகத்திற்கு என்ன பதில் சொல்வது என்று முதலில் தயங்கினோம். ஆனால் நாளடைவில் சுபிக்ஷா ஏன் அந்த முடிவு எடுத்தார்? என்று எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து அவளோடு பேசினோம். அவள் தன்னுடைய முடிவில் மிகவும் தெளிவாக இருந்தாள். LGBT பற்றி பல தகவல்கள் மற்றும் ஆய்வு முடிவுகளை படித்து முழுமையாக அவளுடைய உணர்வுகளை புரிந்து கொண்டோம். சமூக அழுத்தத்திற்காக எங்களுடைய பெண்ணின் உணர்வுகளையும் அழித்து, ஒரு ஆணின் வாழ்க்கையை சிதைத்து ஒரு குடும்பத்தையே மன அழுத்தத்தில் தள்ளி ஒரு கட்டாய திருமணத்தை நடத்தி வைக்க நாங்கள் விரும்பவில்லை.

 
 
அவள் நன்றாக படித்து பொருளாதார தன்னிறைவு பெற்றவள். அவள் வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க அனைத்து உரிமைகளும் அவளுக்கு உள்ளது. அவளின் சந்தோஷமே எங்களின் சந்தோஷம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்து எங்கள் பெண்ணின் வாழ்க்கையில் குறுக்கிட நாங்கள் விரும்பவில்லை" என்று சுபிக்ஷாவின் பெற்றோர் கூறினர்.
 
 
இந்த திருமணத்தில் கசப்புகளும் இல்லாமல் இல்லை. ஆனால் காலப்போக்கில் அவை சரியாகி விடும் என்று நம்புகிறார்கள்.
 
 
 
அதே போல இவர்களின் திருமணத்திற்கு இந்தியாவில் ஸ்வீகார் என்ற அமைப்பு உதவியிருக்கிறது. இந்த அமைப்பு LGBT சமூகத்துக்கு இடையிலான திருமணம் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பான புரிதல் மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வருவதாகவும் இது தங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது என்றும் தெரிவித்தார் சுபிக்‌ஷா.

 
சமூக வலைதளங்களில் தங்கள் திருமணம் குறித்த செய்திகளுக்கு வரும் சில விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று கேட்டபோது, இருவரும் இணைந்து உறுதியாக பதில்களை சொல்கிறார்கள்.
 
 
" இந்த உலகம் அனைத்து மனிதர்களுக்குமானது. அதே போல காதல் என்ற உணர்வும் அனைவருக்கும் பொதுவானது. ஒரு காதல் இப்படிதான் வரவேண்டும், இந்த இருவருக்குள் தான் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாங்கள் இருவரும் இணைந்து பயணிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். இருக்கும் ஒரு வாழ்க்கையை உங்களை சுற்றி இருப்பவர்களின் எண்ணங்களால் கட்டமைத்து கொண்டே போனால் உங்களுக்கான நிறைவான வாழ்க்கையை என்றுமே வாழ முடியாது. அடுத்தவருக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் யாரிடத்தில் நிறைவாக உணர்கிறீர்களோ அவர்களுடன் இணைந்து நிலையாக வாழ்வதே மகிழ்ச்சியான வாழ்வு. அந்த வாழ்க்கையை தான் நாங்கள் இருவரும் தேர்வு செய்திருக்கிறோம் என்று காதலுடன் கரம் பற்றி சொல்கிறார்கள் சுபிக்ஷா மற்றும் டீனா.