வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (20:57 IST)

மேற்கு வங்கத்தில் தொடரும் போராட்டம்.! உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய மருத்துவர்கள்..!!

Doctors Protest
உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைந்த பின்னரும், கொல்கத்தா மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 
 
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, கொல்லப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் உறைவிட மருத்துவர்களின் போராட்டத்தால், இதுவரை 23 நோயாளிகள் உயிரிழந்ததாக மேற்கு வங்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து, கடமையை விலையாகக் கொடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என்று தெரிவித்த நீதிபதிகள், உறைவிட மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை (10.09.2024) 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  
 
இந்நிலையில் உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைந்தும், கொல்கத்தா மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும்  மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.