ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (21:05 IST)

பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம்.! தலையிட கோரி பிரதமர் - ஜனாதிபதிக்கு மருத்துவர்கள் கடிதம்..!!

Doctors Protest
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், தலையிட கோரி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 
 
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.  

இச்சம்பவம் தொடர்பாக  சஞ்சய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. 
 
இதனிடையே பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டும், 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
மருத்துவர்கள் கடிதம்:
 
இந்நிலையில், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

 
மேலும், நான்கு பக்கங்கள் கொண்ட கடிதத்தின் நகல்கள் குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தங்கர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி நட்டா ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனர். 
 
Mamtha
தலா ரூ.2 லட்சம் நிவாரணம்:
 
இதற்கிடையில் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, தகுந்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  உயிரிழந்த 29 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.