சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்..! ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி நாளை பரப்புரை..!!
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை பிரதமர் மோடி நாளை தொடங்குகிறார்.
90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 18ம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதியும் நடைபெறுகிறது.
மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன. ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், பாஜக தனது வெற்றியை உறுதி செய்ய பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
மேலும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தை ஜம்மு காஷ்மீரில் நாளை தொடங்குகிறார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டிருந்தது. இதில் 25 முக்கிய வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. குறிப்பாக முதியோர், கணவரை இழந்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை மும்மடங்காக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது.