விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு.! அனுமதி கேட்டு நிர்வாகிகள் கடிதம்..!!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடத்த அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் இன்று கடிதம் வழங்கியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் இலக்கு என விஜய் தெரிவித்திருந்த நிலையில், தற்போது உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாட்டிற்கான பணிகள் என நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியும், கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மாநாட்டுக்கான பணிகளை விஜய் தொடங்கி உள்ளார். வரும் செப்டம்பர் 22ம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுமதி கேட்டு கடிதம்:
பல்வேறு இடங்களில் மாநாடு நடத்த பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விக்கிரவாண்டி டோல்கேட் அருகே இடமும் தேர்வாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மாநாடு சுமார் 150 ஏக்கர் நிலத்தில் நடத்தப்படவுள்ளது. இதற்கிடையே, விஜய் அறிவுறுத்தலின் பேரில், முதல் மாநாடு நடத்தவும், பாதுகாப்பு கோரியும் அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று கடிதம் வழங்கியுள்ளார்.