பாபா ராம்தேவின் மன்னிப்பை மீண்டும் நிராகரித்த உச்சநீதிமன்றம்..! அரசு அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை..!!
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுா்வேத தயாரிப்புகள், நவீன மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்தும் எனக் கூறி அந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விளம்பரத்தை எதிா்த்து, இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், தவறான விளம்பரங்கள் குறித்து பதஞ்சலி நிறுவனத்தை எச்சரித்தது. இதையடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுா்வேத பொருள்கள் குறித்து எந்தவொரு தவறான விளம்பரங்களும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இனி வெளியிடப்படாது என்று அந்த நிறுவனம் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது
இருப்பினும், சா்ச்சைக்குரிய விளம்பரங்கள் தொடா்ந்து வெளியாகி வந்தன. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையின் போது, பதஞ்சலி நிறுவனம் மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை மீறியதற்காக, பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக் கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் இருவரும் அண்மையில் மன்னிப்புக் கோரினா். ஆனால், அது வெறும் வாய் வாா்த்தையாக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மன்னிப்பை நிராகரிப்பதாக தெரிவித்தது. இந்நிலையில், யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிர்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியே பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், 2வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட இருவரது பிரமாணப் பத்திரங்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மன்னிப்பு கோரிய விதம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்றும் இருவரும் இந்த விவகாரத்தை அலட்சியமாக கையாளுவதாகவும் தெரிவித்தனர்.
பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா அலட்சியமாக இந்த வழக்கை பார்ப்பது போல் நீதிமன்றமும் ஏன் அலட்சியம் காட்டக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத உத்தரகாண்ட் அரசு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.