வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (20:39 IST)

பாலியல் வன்கொடுமை.! கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்.! பிரதமருக்கு மம்தா கடிதம்..!!

Modi Mamtha
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.  
 
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர்,  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் கவலை அளிப்பதாக உள்ளன என்றும் கிடைக்கக்கூடிய தரவுகளின்படி தினமும் கிட்டத்தட்ட 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பலசமயங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் கொல்லப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ள மம்தா, இந்தப் போக்கு அச்சம் அளிப்பதாக இருக்கிறது என்றும் இது சமூகம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையையும் மனசாட்சியையும் உலுக்குகிறது என்றும் கூறியுள்ளார்.
 
இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நமது கடமையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலமே பெண்கள் பாதுகாப்பை உணர்வார்கள் என்றும் இந்த கொடூரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகப் பெரிய தண்டனையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
மேலும் பாலியல் வழக்குகளை விரைவாக முடிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு, 15 நாட்களுக்குள் வழக்குகள் முடிக்கப்பட வேண்டும் என்று தனது கடிதத்தில் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.