வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (14:55 IST)

இனி வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பலாம்! இது மட்டும் இருந்தா போதும்!!

upi
இந்தியாவுக்கு வெளியிலும் கூகுள் பே (Google Pay) செயலியை பயன்படுத்தும் வகையில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 
 
நாட்டு மக்களிடையே தற்போது டிஜிட்டல் பணப்பரிமாற்ற புழக்கம் அதிகரித்து விட்டது. மளிகைச் சாமான் வாங்குவது, காய்கறி வாங்குவது, டீ குடிப்பது, ஹோட்டலில் சாப்பிடுவது, மொபைல் போன், டிடிஎச் ஆகியவற்றிற்கு ரீசார்ஜ் செய்வது, கேஸ் சிலிண்டர் புக்கிங் போன்ற அனைத்திற்கும் மக்கள் யுபிஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 
 
டிஜிட்டல் கட்டண முறைக்கு பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது கூகுள் பே (Google pay) செயலியைத் தான். ஆனால் கூகுள் பே இந்தியாவிற்குள் மட்டும் தான் இயங்கும். வெளிநாடுகளுக்குச் சென்றால் கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது. 
 
இந்நிலையில் தற்போது கூகுள் பே செயலி, உலகம் முழுவதும் இயங்குமாறு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கூகுள் இந்தியா டிஜிட்டல் சர்வீஸ் மற்றும் என்பிசிஐ (NPCI) இன்டர்நேஷனல் பேமென்ட் ஆகியவை இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளிலும் யுபிஐ (UPI) சேவையை விரிவுபடுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. 

 
இதன் மூலம் இனி பணம் அனுப்புவது இன்னும் எளிதாக மாறும். இந்தியாவிற்கு வெளியே செல்லும் பயணிகள் யுபிஐ பேமெண்ட் வசதியை பயன்படுத்தும் வாய்ப்பை அளிப்பது, மற்ற நாடுகளில் UPI போன்ற டிஜிட்டல் பேமெண்ட் முறைகளை நிறுவுவதற்கு வழிவகை செய்வது மற்றும் UPI மூலம் நாடுகளுக்கு இடையே பணம் அனுப்புவதை எளிதாக்குதல் ஆகிய மூன்று நோக்கங்களுக்காக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
UPIயின் எல்லை தாண்டிய இயங்குதளத்தை அதிகரிப்பதன் மூலம், இந்தியப் பயணிகள் மற்றும் இந்தியாவிற்கு வரும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வணிகம் செய்வதையும், பணம் செலுத்துவதையும் எளிதாக்கியுள்ளது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.