வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (21:00 IST)

கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் கோடி கிடைக்குமா? எல்லாம் சுப்ரீம் கோர்ட் கையில்!

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட கனமழையால் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வரலாறு காணாத சோகத்தை அம்மாநில மக்களுக்கு ஏற்படுத்தியது. இந்த இயற்கை பேரிடரில் இருந்து கேரள மக்களை மீட்டெடுக்க மத்திய அரசு, பிற மாநில அரசு மற்றும் உலகின் முன்னணி நிறுவனங்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் விலைமதிப்புள்ள தங்கம், வைரம், நகைகள் பொக்கிஷமாக கிடைத்தது. இந்த பொக்கிஷங்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
 
இந்த நிலையில் பொக்கிஷமாக அறைகளுக்குள் புதைந்து இருக்கும் இந்த செல்வங்களை கேரள வெள்ள நிவாரணப்பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகளும் சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.
 
இதுகுறித்து கருத்து கூறிய திருவதாங்கூர் மன்னர், 'அவசர காலத்துக்கு தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளவே இந்த பொக்கிஷங்கள் வைக்கப்பட்டு உள்ளதாக தனது முன்னோர்கள் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் இந்த பொக்கிஷங்களை வெள்ள நிவாரண பணிகளுக்கு பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி தேவை என்று கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து இதுகுறித்து நல்ல முடிவை எடுத்தால் கேரள மாநிலம் ஒருசில மாதங்களில் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் என்ன முடிவெடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்