1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (10:08 IST)

கடன் தள்ளுபடி; காப்பீடு ! - உயிர் நீத்த வீரர்களுக்காக எஸ்.பி.ஐ. வங்கி எடுத்த அதிரடி முடிவு

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கான கடன் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்து அவர்களுக்கான காப்பீட்டுத் தொகையும் வழங்க இருப்பதாக எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

இறந்த வீரர்களுக்காக தேசிய மரியாதை செலுத்தப்பட்டு அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரணத்தொகைகளையும் அவர்களின் குடும்பத்தாருக்கு அரசுப்பணியும் அறிவித்துள்ளனர். அதைத் தவிர சில தனிநபர்களும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும் அவர்கள் குழந்தைகளின் கல்விச்செலவுகளையும் ஏற்பதாகக் கூறியுள்ளனர்.
 

அதுப்போல இப்போது உயிரிழந்த வீரர்களில் 23 பேர் எஸ்.பி.ஐ. வங்கியில் பெற்றக் கடன் தொகை தள்ளுபடி செய்வதாகவும் மேலும் அவர்களுக்கானக் காப்பீட்டுத் தொகையாக ஆளுக்கு தலா 30 லட்சம் ரூபாய் அளிக்க உள்ளதாகவும் எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில் ‘நாட்டின் பாதுகாப்புக்காகச் சென்று உயிர்நீத்த வீரர்கள் நிலை வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினரை காக்க வேண்டியது அனைவரின் கடமை. வீரர்களை இழந்து தவித்து வரும் குடும்பத்தினருக்கு எங்கள் வங்கியின் மூலம் சிறிய உதவியாக இதை செய்கிறோம். மேலும், எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் சிஆர்பிஎப் வீரர்களுக்கு உதவ விருப்பம் இருந்தால், bharatkeveer.gov.in’ என்ற இணையதளத்தில் நிதியை நேரடியாக அளிக்கலாம் ‘ எனவும் தெரிவித்துள்ளார்.