புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (17:13 IST)

ஆயுஷ் அமைச்சக செயலாளராக தமிழரை நியமனம் செய்யுங்கள்: மூத்த காங்கிரஸ் தலைவர்

இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று கூறிய ஆயுஷ் அமைச்சக செயலரை வெளியேற்றி விட்டு அவருக்கு பதிலாக தமிழர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
சமீபத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடந்தது. அதில் இந்தியில் பேசிய ஆயுஷ் அமைச்சக செயலாளரிடம், தமிழக மருத்துவர்கள் ஆங்கிலத்தில் பேசுமாறு தெரிவித்தனர்
 
ஆனால் ஆங்கிலத்தில் தனக்கு சரளமாக பேச வராது என்றும் ஹிந்தியில் தான் பேசுவேன் என்றும் இந்தி தெரியாதவர்கள் தாராளமாக இந்த வகுப்பை விட்டு வெளியேறலாம் என்று அவர் கூறியதாக தெரிகிறது. ஆயுஷ் அமைச்சக செயலாளரின் இந்த பேச்சுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர் 
 
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது: மத்திய அரசின் ஊழியர் ஒருவர் இந்தி தெரியாத தமிழர்களை வெளியேறும்படி கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அரசுக்கு கொஞ்சமாவது கண்ணியம் இருந்தால் அந்த செயலாளரை பணியில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஒரு தமிழ் தெரிந்தவரை பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். சசி தரூரின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது