சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!
சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடைபெற இருப்பதை அடுத்து பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 16ஆம் தேதி தொடங்கிய மண்டல கால சீசன் நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், நாளை மதியம் மண்டல பூஜை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மண்டல பூஜை அன்று ஐயப்பன் விக்கிரகத்தில் அறிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பவனி பம்பை வந்தடைந்துள்ளது. மாலை 3 மணி வரை பம்பை கணபதி கோயிலில் தரிசனத்திற்காக வைக்கப்படும் இந்த அங்கி, அதன் பின் அப்பாச்சி மேடு, சரங்குத்தி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டுவரப்படும். அங்கு ஐயப்பனுக்கு அங்கி அணிந்து தீபாராதனை நடத்தப்படும்.
இந்த நிலையில், இன்றும் நாளையும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று 50 ஆயிரம், நாளை 60 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த இரண்டு நாட்களிலும் புக்கிங் எண்ணிக்கை வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva