1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 டிசம்பர் 2024 (09:04 IST)

சதுரகிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. பக்தர்களுக்கு தடை விதித்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு..!

சதுரகிரி மலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், ஏற்கனவே பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. டிசம்பர் 13 முதல் 16 வரை பிரதோஷம், பௌர்ணமி வழிபாட்டிற்காக முதலில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒருவேளை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்றும், பக்தர்களுக்கு முன்கூட்டியே தடை விதிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சதுரகிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran