மக்களவையில் ஒலித்த ”ஜெய் பீம்”, “அல்லாஹ் ஹூ அக்பர்” கோஷம் – ஆட்டம் கண்ட மக்களவை
இன்று மக்களவை எம்.பிக்கள் பதவி பிரமாணம் செய்து கொண்ட போது தங்கள் தலைவர்களின் பெயராலும், மொழியின் பெயராலும் கோஷமிட்டது மக்களவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பிக்களுக்கான பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்.பிக்களும் பதவியேற்று கொண்டனர். ஒவ்வொரு எம்.பியும் பதவி ஏற்பு முடிந்ததும் “வாழ்க தமிழ்” என கோஷமிட்டனர். இது மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. உடனே பாஜக எம்.பிக்கள் கூட்டமாக “பாரத் மாதா கீ ஜே” என கத்தினர்.
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் பதவி ஏற்றதும் “ஜெய் ஜவான், ஜெய் கிஷான், காமராஜர் வாழ்க, ராஜீவ் காந்தி வாழ்க” என்றார்.
அதிமுக எம்.பி ரவீந்திரநாத் பதவி ஏற்றதும் “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க, புரட்சி தலைவி அம்மா வாழ்க, ஜெய்ஹிந்த” என கூறினார்.
திமுக எம்.பி கனிமொழி பதவி ஏற்றபோது ”வாழ்க தமிழ், வாழ்க பெரியார்” என்று சொன்னார்.
மற்ற எம்.பிக்கள் சிலர் எதுவும் சொல்லவில்லை. சிலர் “தமிழ் வாழ்க” என்று கூறியதோடு நிறுத்தி கொண்டனர்.
ஆனால், ஐதராபாத் எம்.பி அசாதுதீன் ஓவைசி பதவி ஏற்க வந்தபோதுதான் மக்களவை கூட்டமே திசை திரும்பியது. அவர் எழுந்து வர தொடங்கியதுமே பாஜக எம்.பிக்கள் ”ஜெய்ஸ்ரீ ராம்” என கூச்சலிட தொடங்கினர். தொடர்ந்து அவர் மேடைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு சாசனத்தை வாசிக்கும் வரை “ஜெய்ஸ்ரீ ராம்” முழக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
பதவி பிரமாண வாசகங்களை படித்து முடித்ததும் இறுதியாக ”ஜெய் பீம், அல்லாஹ் ஹு அக்பர், ஜெய் பாரத்” என அவர் கூறியதும் அவை முழுவதும் பெரும் சலசலப்பு எழத் தொடங்கியது.
தொடர்ந்து அடுத்தடுத்த எம்.பிக்கள் பதவியேற்பு நடந்ததால் சலசலப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.