ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி! – விரைவில் அமல்!
ஆன்லைன் விளையாட்டு மற்றும் கேசினோ விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் குதிரை பந்தயம், கேசினோ உள்ளிட்ட கேளிக்கைகள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சேவைகளை மதிப்பிடுவது மற்றும் வரியை அதிகப்படுத்துவது குறித்து கடந்த ஆண்டு அமைச்சர்கள் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது.
மேகாலயா முதல்வர் தலைமையில் தமிழக நிதியமைச்சர் உள்ளிட்ட 8 மாநில அமைச்சர்கள் அமைந்த இந்த குழு மேற்படி சேவைகளை மதிப்பிட்டனர். பின் இந்த சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியை 28 சதவீதமாக உயர்த்தலாம் என இந்த குழு பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான அறிக்கை சில நாட்களுக்குள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.