மனைவியே வேண்டாம்: அரச மரத்தை சுற்றி வேண்டுதல் செய்யும் ஆண்கள்
பெண்கள் தான் அரச மரத்தை சுற்றி குழந்தை வேண்டும் என்பது உள்பட பல்வேறு வேண்டுதல்களை செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் நேற்று வடமாநிலங்களில் அரச மரத்தை ஆண்கள் சுற்றி 'இப்போது இருக்கும் மனைவி தங்களுக்கு ஏழேழு ஜென்மங்களிலும் வேண்டாம்' என்று வேண்டுதல் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் வத் சாவித்ரி அல்லது வத் பூர்ணிமா என்ற பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். எமனிடம் போராடி சத்யவானை மீட்ட சாவித்ரியை ஞாபகப்படுத்தும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படும். இந்த பண்டிகையின்போது பெண்கள் அரச மரத்தை சுற்றி இப்போது இருக்கும் கணவரே தனக்கு ஏழேழு ஜென்மத்திலும் வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். இந்த பண்டிகை வட மாநிலங்களில் நேற்று கொண்டாடப்பட்டது
இந்த நிலையில் மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்களும் நேற்று அரச மரத்தை சுற்று தங்களுக்கு இனி ஏழேழு ஜென்மத்திலும் மனைவியே வேண்டாம் என்று வேண்டுதல் செய்துள்ளனர். பெண்கள் சட்டத்தை பயன்படுத்தி தங்கள் மீது பொய் வழக்குகள் போட்டதால் மனதளவிலும் பொருளாதார அளவிலும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இதுபோன்ற மனைவி இனிமேல் தங்களுக்கு எந்த ஜென்மத்திலும் வேண்டாம் என்ற கோரிக்கையுடன் அரச மரத்தை சுற்றி வருவதாகவும் ஆண்கள் தெரிவித்துள்ளனர்